பதிவு செய்த நாள்
16
பிப்
2017
10:02
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, சின்ன ஓம்காளிஅம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருச்செங்கோடு, சின்ன ஓம் காளி அம்மன் கோவில் மாசி தீக்குண்டம் திருவிழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் அழைத்தல், மற்றும் சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த, 10ல், பக்தர்கள் அலகு குத்துதல், 13ல், பூச்சொறிதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கியது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று அதிகாலை, 60 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் தீ மிதித்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 18ல், அம்மன் திருவீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.