பதிவு செய்த நாள்
16
பிப்
2017
11:02
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், பள்ளி மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றி பெற வேண்டி, லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை, நேற்று துவங்கியது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையோரம் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, கல்விக் கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளி உள்ளார். ஆண்டு தோறும், மாணவ, மாணவியர் கல்விகளில் வெற்றி பெற வேண்டி, லட்சார்ச்சனை பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கியது. காலை, 9:00 மணிக்கு ஹயக்ரீவர் திருமஞ்சனம், சங்கல்பம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவ வித்யா தீபாராதனை, இரவு, 8:00 மணிக்கு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று துவங்கி, 18 வரை, காலை, 8:30 மணிக்கு, அபிஷேகம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவ, மேதா சரஸ்வதி வித்யா மகா மந்த்ரா, மாலை, 4:30 மணிக்கு, லட்சார்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பிப்., 19 காலை, 7:00 மணிக்கு, புன்யாக வாசனம், ஹோம சங்கல்பம், லட்சார்ச்சனை நிறைவு, அன்னதானம் வழங்குதல், மாலை, 6:00 மணிக்கு, ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி, திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.