பதிவு செய்த நாள்
21
பிப்
2017
11:02
கொடைக்கானல்: கொடைக்கானலில் மேல்மலை கிராமமான பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயிலான இக்கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடியில் இருந்து குடங்களில் கொண்டு வந்த தீர்த்தத்தாயணல் குழந்தை வேலப்பருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காவடி ஆட்டம், அலகு குத்தும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து தேர்முட்டியில் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்தனர். மாலை 6 மணியளவில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதியில் சுற்றி வந்தது. களிமண் திட்டு என்ற இடத்தில் பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்தனர். பெண்கள் அடி அளந்து கும்பிட்டு வழிபாடு, படி உருளுதல், வாழை சூறை எறிதல், கீரை சாப்பாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பறவைக் காவடி, வாணவேடிக்கையால் கிராமம் களை கட்டியது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், பழநி இணை ஆணையர் இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, ஆர்.டி.ஓ. சுரேஷ், டி.எஸ்.பி. சந்திரன், தாசில்தார் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.பி.ஐ., முதன்மை மேலாளர் சீனிவாசன் பங்கேற்றனர். இன்று குழந்தை வேலப்பரை பூம்பாறையிலிருந்து பழநிக்கு குதிரை வாகனத்தில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்து, பின் கொடி இறக்கம் நடைபெறும்.