பதிவு செய்த நாள்
22
பிப்
2017
11:02
நாகர்கோவில்: சிவராத்திரியை ஒட்டி குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடக்கிறது. 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், விடிய விடிய நான்கு கால பூஜை என நடைபெறும் சிவராத்திரி விழா குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படும். கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவில் சுமார் 100 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபட்டு சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். முஞ்சிறை அருகே அமைந்துள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கும் இந்த ஓட்டம், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் வழிப்பட்ட பின்னர் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் நிறைவு பெறுகிறது.
24ம் தேதி சிவராத்திரியை ஒட்டி நாளை மாலை இந்த ஓட்டம் தொடங்குகிறது. ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கையில் விசிறி, திருநீறு பையுடன் கோபாலா, கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடுவர். தற்போது கார் மற்றும் வாகனங்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி 12 சிவன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிவராத்திரி நாளான 24ம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.