பதிவு செய்த நாள்
23
பிப்
2017
12:02
ஆர்.கே.பேட்டை : காந்தகிரி அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில், நாளை மாலை, பிரதோஷ உற்சவத்துடன் சிவராத்திரி விரதம் துவங்குகிறது. ஆர்.கே.பேட்டையில் இருந்து, விளக்கணாம்பூடி வழியாக, சுந்தரராஜபுரம் செல்லும் வழியில் உள்ளது, காந்தகிரி மலைக்கோவில். அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு, பிரதோஷம், திருக்கல்யாணம் உள்ளிட்ட உற்சவங்களுடன் சிவராத்திரியும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாளை, மாலை 4:30 மணிக்கு, பிரதோஷ பூஜை துவங்குகிறது. பிரதோஷ அபிஷேகம், பிரதோஷ நாதர் உலாவை தொடர்ந்து, சிவராத்திரி உற்சவம் தொடர்ந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நகரி அடுத்த, ராமகிரி வாலீஸ்வரர் கோவில் தனி சிறப்பு வாய்ந்தது. அனுமன் மற்றும் பைரவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். வற்றாத சுனை கொண்டுள்ள இந்த தலத்திலும், சிவராத்திரியை ஒட்டி, நாளை இரவு, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நகரி, கரகண்டேஸ்வரர் கோவில், புதுப்பேட்டை சிவாலயம் உள்ளிட்ட இடங்களிலும், சிவராத்திரி உற்சவம் நடைபெறும்.