பதிவு செய்த நாள்
28
அக்
2011
10:10
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வடசித்தூர் கிராம மக்கள் மட்டும் தீபாவளிக்கு மறுநாளான நேற்று "மயிலந்தீபாவளி யை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடசித்தூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் "மயிலந்தீபாவளியாக கொண்டாடுகின்றனர். அன்று ராட்டினம் அமைக்கப்பட்டு, ஊரே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படும். இக்கிராமத்தில் இந்துக்கள் மட்டுமில்லாது, முஸ்லிம் குடும்பங்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் உறவினர்போல் பழகி வருவதால், ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் வரும் "மயிலந்தீபாவளி கிடா வெட்டில் கலந்து கொள்கின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் கவுண்டர் இனத்தில் செம்பங்கூட்டம் என்ற குலத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் அமாவாசை மற்றும் செவ்வாய் கிழமையன்றும் மாமிசம் சாப்பிடுவது இல்லை. இதனால், செவ்வாய் கிழமையன்று தீபாவளி வந்தால், அதற்கு அடுத்தநாளான புதன் கிழமையன்று மயிலந்தீபாவளியாக மாற்றியமைத்து கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இக்கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக பெரியார் நினைவு "சமத்துவபுரம் திறக்கப்பட்டது. வடசித்தூரில் இந்து, முஸ்லீம் மக்கள் பல தலைமுறைகளாக ஒற்றுமை உணர்வுடன் "மயிலந்தீபாவளியை கொண்டாடி வருவது, இக்கிராமத்தின் தனிச்சிறப்பு.அதன்படி நேற்று "மயிலந்தீபாவளி அன்று பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தனர்.நேற்று மாலை 3.00 மணியளவில் இருந்தே மழை தொடர்ந்து பெய்ததால், வடசித்தூர் கிராமத்திற்குட்பட்ட அனைத்து பொதுமக்களும், ஊராட்சி மன்றத்தின் முன்பு உள்ள மைதானத்தில் ஒன்று கூடி ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சமாக ஏறி விளையாடுவது வழக்கம். ஆனால், நேற்று மழை காரணமாக ராட்டினத்தில் ஏறி விளையாட முடியவில்லை. ஆனால், மட்டன் விருந்து அமர்க்களமாக நடந்தது. "மயிலந்தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதனால், வடசித்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.