பதிவு செய்த நாள்
28
அக்
2011
10:10
திருச்செந்தூர்,:திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவி கோலாகலமாக நேற்று முன்தினம் துவங்கியது. பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடித்து அங்க பிரதட்சணம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், சூரசம்ஹாரம் நடந்த ஸ்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் தீபாவளி அன்றே கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது. கந்த சஷ்டி ஒன்றாம் திருநாளான நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற காலங்கள் தொடர்ந்தும் நடந்தது.
யாகசாலை பூஜை: காலை 6 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை 10 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு மூலவருக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.விண்ணைப்பிளந்தது அரோகரா கோஷம். பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் யாகசாலையில் இருந்து எழுந்தருளி சண்முகவிலாச மண்டபம் சென்றார். அங்கு தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி உலா வரும்போது பக்தர்கள் வேல் வகுப்பு வாள் வகுப்பு பாடினர்.
தீபாராதனையின் போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் பக்திபெருக்குடன் சுவாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டியில் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களும் தமிழகம் மட்டுமல்லாது, அண்டைய மாநிலம், நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் பூண்டுள்ளனர். விரதம் பூண்ட பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி அங்கபிரதட்சணம் செய்து விரதம் துவங்கினர். கந்தசஷ்டி 2ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. காலை 10 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம் யாகசாலை ஹோமமும் நடந்தது. 12 மணியளவில் உச்சிகால பூஜை முடிந்ததும் யாகசாலையில் சிறப்பு மஹா தீபாராதனை நடந்தது.
தங்கசப்பரத்தில்வலம்: அதனை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரம் வலம் வந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வேல் வகுப்பு, வாள் வகுப்பு பாட சண்முக விலாசம் வந்து சேர்ந்தார். அவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு கந்தசஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி தெய்வானை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஜெயந்திநாதர் தங்கத் தேரில் கிரிவீதி வலம் வந்து கோயிலை சென்றடைந்தார்.
வரும் 31ம் தேதி சூரசம்ஹாரம் : விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற 31ம் தேதி நடக்கிறது. 1ம் தேதி காலை தபசு காட்சிக்கு அம்மன் எழுந்தருளுகிறார். மாலையில் சுவாமியும், அம்பாளும் தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு கோயில் திருப்பணி மண்டபத்தில் வைத்து திருக்கல்யாணம் நடக்கிறது. 1ம் திருநாள் யாகசாலை பூஜையில் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் செல்லத்துரை, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.