பதிவு செய்த நாள்
27
பிப்
2017
10:02
ராமேஸ்வரம்: மாசி அமாவாசையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா பிப்.,17ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாளான நேற்று மாசி அமாவாசையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்தக்கரையில் திதி கொடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.மதியம் 1:40 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுடன் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு மகா தீபாராதனையும், தீர்த்தம் வாரி நிகழ்ச்சியும் நடந்தது.மாலை 6:30 மணிக்கு அக்னி தீர்த்த கரையில் இருந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்தனர். இதையடுத்து, இரவு 8:00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது. இரவு 8:10 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு வந்ததும் நடை திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜை முடிந்த பின் மீண்டும் நடை சாத்தப்பட்டது.