பதிவு செய்த நாள்
28
பிப்
2017
12:02
குறிச்சி : ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள அங்காளம்மன் கோவிலில், நேற்று குண்டம் இறங்கும் விழா நடந்தது. விழா, கடந்த 17 மாலை பூசாரி வீட்டில் வசமுத்திரி கட்டுதலுடன் துவங்கியது. 23 நள்ளிரவு விநாயகர் பூஜை, காப்பு கட்டி கொடியேற்றுதலும், மறுநாள் முகப்பள்ளயம், சிவன் ராத்திரி அம்மை அழைத்தல், அபிஷேக ஆராதனை நடந்தன. நேற்று முன்தினம் காலை, மாவிளக்கு, விநாயகர் கோவிலில் இருந்து விந்தை வருதல், மதியம் பள்ளயம் எடுத்தல், ஊர் கோவில்களில் பள்ளயம் இடுதல், மாலை குண்டம் திறப்பு மற்றும் அக்னி வளர்த்தலும் நடந்தன. நேற்று அதிகாலை, சுவாமி திருத்தேர் உலா வருதல், தெப்பம் விளையாடுதல், அக்னி விந்தை அலகு தரிசனம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட ஆண்கள் குண்டம் இறங்கினர். இதையடுத்து, அம்மன் திருவீதி உலா, அரச மரம் வலம் வருதல், மதியம் அபிஷேக ஆராதனை ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம், 1:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு, 8:00 மணிக்கு பரிவேட்டையும், நாளை மதியம் ஆராதனை, நள்ளிரவு கிராம சாந்தியும் நடக்கின்றன. புதன்கிழமை இரவு, கொடி இறக்குதல், காப்பு அவிழ்த்தல், ஊர் அபிஷேகமும், வியாழனன்று காலை, 9:00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மஞ்சள் நீர் பவனியும் நடக்கிறது. வெள்ளியன்று பேச்சியம்மன் பூஜை, வசந்த விழாவுடன், திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தார் செய்துள்ளனர்.