பதிவு செய்த நாள்
07
மார்
2017
05:03
மாசிமகம் என்றதும், கும்பகோணம் மாமாங்கக்குளம் நினைவுக்கு வரும். மாமாங்கம் என்னும் மகா மகம் திருவிழா. அன்று, அந்தப்புனிதமான அமிர்தக் குளத்தில் நீராடினால் பாவங்கள் அழிந்து புனிதம் சேரும் என்பது ஐதீகம். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்துப் புனித நதிகளிலும் நீராடிய பலன்களைப் பெறலாம். அதேபோல் அந்த நன்னாளில் கடலாடு தீர்த்தமும் போற்றப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்தார். லக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டதால் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆனார்.
திருமால் வைகுண்டம் சென்று விட்டதால், நாம் எப்போது அவரைத் தரிசிப்பது? என்று கவலைப்பட்டார். சமுத்திரராஜன் இதனை அறிந்த மகாவிஷ்ணு நான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு புண்ணிய நாளில் கடற்கரைக்கு வந்து தரிசனம் தருகிறேன் என்று அருளினார். அந்த நாள்தான் மாசிகம் என்கிறது புராணம். அதனால் சில கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் மாசிமகத்தன்று தீர்த்தவாரி நடைபெறும். அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி எம்பெருமான். கருடவாகனத்தில் எழுந்தருளி, வழக்கமாக தெற்கு மடாவீதி, துளசிங்க தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலை வேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தீர்த்த பாலீஸ்வரர் கோயிலில் அருள் புரியும் மூலவர் தீர்த்தபாலீஸ்வரரும் மாசி மகத்தன்று அம்பாள் திரிபுரசுந்தரியுடன் சூரிய உதயத்திற்கு முன்பே சமுத்திரத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் பாலித்து அருளாசி வழங்குவது வழக்கம். மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர், அம்பாள், ஸ்ரீகற்பகாம்பிகை ஆகியோரும், மயிலையிலுள்ள சிவன்கோயில்களில் அருள்புரியும் தெய்வங்களும் அன்று தீர்த்தவாரி வைபவத்திற்குக் கடற்கரைக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள். நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இத்தலம் விருத்தாசலத்திற்குத் தென்கிழக்கே சுமார் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ பூவராகவன், தாயார் ஸ்ரீஅம்புஜவல்லி.
இங்கு மாசிமகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறும். கிழக்கு சமுத்திரத்திற்கு சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள தைக்கால் என்ற கிராமத்திற்கு பூவராகசுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போது வழியில் அந்த ஊரில் வசிப்பவர்கள் சீர்வரிசையுடன். மேளதாளங்களுடன் தீர்த்தவாரி காண வரும் பெருமாளை எதிர்கொண்டு அழைப்பார்கள். பட்டு பீதாம்பரம், மாலைகள் சாத்துவார்கள். வீதியில் எழுந்தருளிச் செல்லும்போது நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியில் மேற்புற வாசலின் எதிரில் சுவாமியை நிறுத்தி, சுவாமிக்கு மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நிவேதனம் அளித்து மரியாதை செய்வார்கள். இதே போல் ஹாஜியா சமாதியின் மேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பிறகு, கிள்ளை மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் ஸ்ரீஉலகளந்த பெருமாள். திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் இருவரும் ஒன்று கூடி எழுந்தருளி தீர்த்தவாரி அளிப்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது. நூற்றியெட்டு வைணவத்திருத்தலங்களில் ஒன்றான கடல் மல்லை எனப்படும் மாமல்லபுரம், புண்ணியத்திருத்தலங்களில் ஒன்று. மாமல்லபுரம் கடலில் நீராடுவதால் ராமேஸ்வரம் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடிய பலன் கிட்டும். இங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இங்கு ஸ்தலசயனப் பெருமாள் கிழக்கு முகம் நோக்கி சயனத்திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார் - தாயார் ஸ்ரீநீலமங்கை நாச்சியார்.
புண்டரீக மகரிஷி, தாமரை மலர்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்துக் கொண்டு, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க எண்ணி கடற்கரைக்கு வந்தார். மலர்க்கூடையை கடற்கரையில் வைத்து விட்டு கடல் நீரை இறைத்து விடலாம் என்று கைகளால் கடல் நீரை இறைக்கத் தொடங்கினார். அப்போது முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் தனக்கு பசிப்பதாகவும் ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருமாறும், அதுவரை கடல்நீரைத் தான் இறைப்பதாகவும் கூறவே, முனிவரும் உணவு வாங்குவதற்கு ஊருக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் உணவு வாங்கி வந்த முனிவர், கடல் நீர் உள்வாங்கி இருப்பதைக் கண்டார். தண்ணீரை இறைப்பதாகச் சொன்ன அந்த வயோதிகரைத் தேடினார். அவரைக் காணவில்லை. அந்த சமயத்தில் ஓர் ஒலி கேட்டது ஒலி வந்த திசை நோக்கிப் பார்த்தார் முனிவர். அங்கே முனிவர் கடற்கரையில் வைத்துச் சென்ற தாமரை மலர்கள் அடங்கிய கூடையிலிருந்தது. அதிலிருந்த மலர்களை தனது திருவடிகளில் சேர்த்துகொண்டு சயனக் கோலத்தில் முனிவருக்கு சேவை சாதித்தார் ஸ்ரீமன் நாராயணன்.
திருமால், தன் திருக்கரங்களால் கடல் நீரைத் தொட்டு இறைத்ததனால் இத்தலம் அர்த்த சேது என்று போற்றப்படுகிறது. பெருமாள், மாசிமக நன்னாளில் தீர்த்த வாரி காண்பதால் அன்று இக்கடலில் நீராடி ஸ்தல சயனப் பெருமாளை வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். இத்திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றத்திலிருந்து சுமார் 19 கி.மீ. தூரம். தரிசன நேரம் காலை 6.30 மணி முதல் பகல் 12.00 மணிவரை. பிற்பகல் 3.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும். புதுவையில் மாசி மகத்தன்று நூற்றுக்கணக்கான கோயில்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தெய்வங்கள் அலங்காரத்துடன் - புதுவையில் வைத்திக்குப்பம் கடற்கரையில் அமைந்த பந்தலில் எழுந்தருள்வார்.