பழநி: பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி மாரியம்மன்கோயிலில் மாசித்திருவிழா பிப்.,17ல் துவங்கி மார்ச் 9 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தேரோட்டத்தையொட்டி மாரியம்மன் காலையில் பாதிரிப்பிள்ளையார் கோயிலில் எழுந்தருளினார். அங்கு தீர்த்தம் கொடுத்தலுக்குப்பின், தேர்நிலையில் இருந்து அம்மன் தேரேற்றம் செய்யப்பட்டார். மாலை 4.30மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பக்த்ரகள் தேரின்மீது பழங்களையும், நவதானியங்களையும் வீசினர். கிழக்குரத வீதியில் இருந்து தெற்குரதவீதிக்கு செல்லும்போது மேடான பகுதியில் தேரை நகர்த்த பக்தர்கள் சிமரப்பட்டனர். வழக்கமாக கோயில் யானை கஸ்துாரி, தேரை நகர்த்த உதவும். இந்தாண்டு யானைகள் முகாமுக்கு சென்றுவிட்டதால், பக்தர்களே சிரமப்பட்டு நகர்த்தினர். நான்குரத வீதிகளில் தேர்வலம் வந்து மாலை 5.25மணிக்கு தேர்நிலையை வந்து அடைந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், சப்கலெக்டர் வினித், எம்.எல்.ஏ., செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இரவு 9 மணிக்குமேல் வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டது. இன்று மாரியம்மன் நீராடல், இரவு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் கொடி இறக்குதலுடன் மாசித்திருவிழா முடிகிறது.