திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த பிப்.,23ல் பூ அலங்காரம், பிப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாகல்நகர் புறப்பாட்டில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 8, 9ல் நடந்த வீதியுலாவில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதனை தொடர்ந்து திருமஞ்சன பால் அபிஷேகம் முடிந்து, நேற்று காலை 7:30 மணிக்கு பூக்குழி திருவிழா துவங்கியது. மதியம் 12:30 மணி வரை நடந்த நிகழ்வில் 16 ஆயிரம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கி, பூக்குழி இறங்கினர். இரவு 8:00 மணிக்கு ரதவீதியில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தசாவதாரம்: இன்று காலை அம்மன் வெண்ணெய் தாழி அவதாரத்துடன், கரகத்துடன் வீதியுலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு கழுமரம் நட்டு கழுவேற்றம் நடக்க உள்ளது. இரவு 10:00 மணிக்கு அம்மனுக்கு தசாவதார அலங்காரங்கள் நடைபெறும்.