பதிவு செய்த நாள்
10
மார்
2017
05:03
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமானோர் தேரை வடம்பிடித்து, தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, விசேஷ வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. கடந்த 7ம் தேதி விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாள் உற்சவத்தையொட்டி, அதிகாலை 4:35 மணியளவில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன. காலை 5:45 மணியளவில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கருணாகரன் முன்னிலையில் விநாயகர் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து, தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் மற்றும் சன்னதி வீதியில் 48 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், குட்டி விமானம் மூலம் தேரோட்டம் முழுவதையும் போலீசார் பதிவு செய்தனர். தேரோட்டத்தில் பணிபுரிபவர்கள் உட்பட 85 பேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விபத்து காப்பீடு செய்யப்பட்டிருந்தது.