பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவில், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது; நாளை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனைமலையில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சர்க்கார்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 75 அடி உயர மூங்கில் மர கொடி கம்பத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி இரவு 8:00 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு அம்மன் ஆபரணம் அழைத்து வருதல், அரவாண் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று அலங்கார தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (14ம் தேதி) காலையில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, தேரோட்டம் நடைபெறுகிறது.