200 ஆண்டு தெப்பக்குளத்தை சீரமைக்க வாட்ஸ்ஆப்பால் இணைந்த இளைஞர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2017 12:03
காளையார்கோவில்: காளையார்கோவிலில் 200 ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெப்பக்குளத்தை வாட்ஸ்ஆப்பால் இணைந்த இளைஞர்கள் சீரமைத்தனர். காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் வரலாற்று நினைவு சின்னமாக உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கு முன் 12 ஏக்கரில் 20 அடி ஆழத்தில் நான்கு புறமும் படிகளுடன் அமைக்கப்பட்டது. நகரில் மழைநீர் வீணாகாமல் தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் வரத்துக்கால்வாய்கள் உள்ளன. தற்போது ஆக்கிரமிப்பால் வரத்துக் கால்வாய்கள் ஆங்காங்கே அடைபட்டுள்ளன. இதனால் 10 ஆண்டுகளாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே வற்றாமல் இருந்த தெப்பக்குளம், சில ஆண்டுகளாக மழைக்காலத்திலேயே வறண்டு விடுகிறது. தெப்பக்குளக் கரைகள் திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பை கொட்டுமிடமாகவும் உள்ளது. இரவு நேரத்தில் பாராகவும் உள்ளது. முட்புதர்களும் மண்டியுள்ளன. பராமரிப்பின்றி பாரம்பரியமான தெப்பக்குளம் வீணாகி வருகிறது. காளையார்கோவில் இளைஞர்கள் காப்போம் என வாட்ஸ்ஆப் குருப்பை துவங்கி தெப்பக்குளத்தை சீரமைக்க அழைப்பு விடுத்தனர். இதையடுத்து இளைஞர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கினர். அவர்கள் முட்செடிகளை அகற்றினர்.