பதிவு செய்த நாள்
28
மார்
2017
10:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றா மரைக்குளத்தின் கிழக்கு பகுதியை, 1.67 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரைக்குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க, சென்னை, ஐ.ஐ.டி., குழுவினர், 2014ல் ஆய்வு மேற்கொண்டனர். வர்ணம் பூசும் பணி : பொற்றாமரைக்குளத்தின், சிமென்ட் தரைத்தளம் பெயர்த்து எடுக்கப்பட்டு, கண்மாய் வண்டல் மண் நிரப்பி, தண்ணீர் தேக்கப்பட்டது. ஐ.ஐ.டி., குழுவின் இம்முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதன் பயனாக, கடந்த மூன்று ஆண்டு களாக, பொற்றாமரைக்குளத்தில் தண்ணீர் வற்றாமல் தேங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பொற்றாமரைக்குளத்தின் தெற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகளின் மேற்கூரைகள் சிதிலமடைந்து இருந்தன. முதற்கட்டமாக, தெற்கு மேற்கூரையை, 1.67 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி, 2015ல் துவங்கியது. கற்துாண்கள் மாற்றப்பட்டு, கலைநயமிக்க புதிய கற்துாண்கள் நிறுவப்பட்டன. மேற்கூரை கற்பலகைகளால் வேயப்பட்டன. இப்பணி நிறைவு பெற்று புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. வர்ணம் பூசும் பணி, விரைவில் துவங்கவுள்ளது.
இரு மாதங்களுக்குள் : இதையடுத்து, சிதில மடைந்த கிழக்கு மேற்கூரையை புனரமைக்கும் பணி, 1.67 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியுள்ளது. புனரமைப்பு பணியை, இரு மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்தபதிகள், கோவிலில் தங்கியிருந்து, பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். இப்பணி முடிந்ததும், வடக்கு பகுதி மேற்கூரை புனரமைக்கும் பணி துவங்கவுள்ளது.