பதிவு செய்த நாள்
28
மார்
2017
11:03
காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் புதிதாக செய்யப்பட்ட தங்க பல்லக்கு, நேற்று மாலை நான்கு ராஜ வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம், 9ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது; வியாழக்கிழமை நிறைவு பெறுகிறது. அதை முன்னிட்டு, நேற்று, கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது. அபிஷேகம் வரும், 30ம் தேதி காலை, 5:30 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித நீர் கலசம் எடுத்து சென்று காமாட்சி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு, 7:30 மணிக்கு காமாட்சி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நான்கு ராஜவீதி முன்னதாக, மண்டலாபிஷேகம் பூர்த்தி விழாவில், நேற்று மாலை, 5:00 மணிக்கு காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து புதியதாக செய்யப்பட்ட தங்க பல்லக்கு, பக்தர்கள் பார்வைக்காக, நான்கு ராஜ வீதிகளில் எடுத்து செல்லப்பட்டது. தங்க தகடால் அழகுற செய்யப்பட்டிருந்த பல்லக்கில், அம்மன் படம் வைக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட அம்மனை, ஏராளமான பக்தர்கள் பார்த்து வழிபட்டனர்.