பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
02:04
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டத்தில், பழம்பெருமை வாய்ந்த அம்மன் கோவிலாக, பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் விளங்குகிறது. ஆண்டு தோறும், பங்குனி மாதம், குண்டம் திருவிழா நடக்கும். நடப்பாண்டு திருவிழா, வரும் 11ல் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடந்தது. கோவிலில் இருந்து அருகிலுள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மேளதாளத்துடன் ஆயக்கால் (தேர் முகூர்த்தக்கால்) கொண்டு செல்லப் பட்டு, அங்கு சிறப்பு பூஜை நடந்தது. மீண்டும் அங்கிருந்து, கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப் பட்டு, ஆயக்கால் நடப்பட்டது. அதன்பின், காவல் தெய்வமான பட்டத்தரசியம்மன் அழைப்பு மற்றும் பொங்கல் வைத்தல் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வரும், 5ம் தேதி இரவு, கிராம சாந்தியை தொடர்ந்து, கொடியேற்றம் நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏப்., 10, 11ம் தேதிகளில், அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.