பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
01:04
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் போடுதல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. உடுமலை மாரியம்மன் கோவில், திருவிழாவுக்கு மார்ச் 28ல் நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, தேர்த்திருவிழாவுக்கான கம்பம் போடுதல் நிகழ்ச்சி இன்று, காலை 8.30 மணிக்கு நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தீர்த்த கிணற்றில் இருந்து, கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலில் கம்பம் நிலைநாட்டப்படுகிறது. செவ்வாய் வடிவமான மண் சட்டியில், சூரியன் வடிவமான அக்னியை வளர்த்து, இதற்கு, வேப்பிலையை தாங்கி வந்து நன்றிக்கடன் செலுத்துகிறோம்; கோபம், வெகுளி, மயக்கம், ஆணவம், கன்மம், மாயை, கொப்புளம், கொள்ளை, வெப்பு ஆகியவற்றை, அடியோடு வேரறுக்க, அன்பு, பக்தி, ஒழுக்கம் நெறி நின்று வாழ்ந்திட, சத்தியம் தழைக்க, மூன்று கிளை, மூன்று முகமான கம்பம் நிலைநிறுத்தப்படுகிறது, என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர்ச்சியான நீரால் அந்த கம்பத்துக்கு, அபி ேஷகம் செய்வதை உடுமலை பகுதி மக்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். கம்பம் போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, வரும் 7ம் தேதி கொடியேற்றமும் தொடர்ந்து, நாள்தோறும், சிறப்பு வாகனத்தில், அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கும். பக்தர்கள் வருகை கோவிலுக்கு அதிகரித்துள்ளதையடுத்து, இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.