பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
03:04
சபரிமலை: தேவஸ்தானத்துக்கும், வாரியத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால், சபரிமலை அய்யப்பன் கோவிலில், பூஜை செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், பம்பை நதியில் குளித்து, பூஜைகள் செய்வது வழக்கம். அய்யப்பன் கோவிலுக்கு மேல்பகுதியில் உள்ள குன்னார் அணையில் நீர் நிரம்பியிருக்கும்போது, இந்த நதியில் தண்ணீர் வற்றாது. தற்போது, குன்னார் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டதால், பம்பை நதி, நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர், கோவிலை சுத்தப்படுத்துவதற்கும், பூஜை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
கோவிலில், 1.20 கோடி லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. அய்யப்பன் கோவில் மற்றும் 18 படிகளை சுத்தம் செய்ய, தினமும் 50 முதல் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால், கோவிலுக்கு தேவையான தண்ணீர், மாநில குடிநீர் வாரியத்திடம் இருந்து, விலைக்கு வாங்கப்படுகிறது. இதுவரை வாங்கிய தண்ணீருக்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்படாததால், தேவஸ்தானத்திற்கும், குடிநீர் வாரியத்துக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், சபரிமலையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.