பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
02:04
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. தேனி எஸ்.பி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழா மே 9ம் தேதி முதல் 16 வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்கு சென்று வர இடையூறு இல்லாத வகையில் கடைகள் அமைத்து ஒருவழிப்பாதை அமைக்கவும், தேர் வரும் ரோடுகளை மேடுபள்ளங்கள் இன்றி சீரமைப்பு செய்வது தேரின் எடைக்கு தகுந்தவாறு மின்சாரம் பாய்திடாத பொருட்களை கொண்டு வடம் தயார் செய்வது, ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் கூடுதல் வசதிகள் செய்வது, போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்துவது, காவல் கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கேமரா, உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பது என முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிறுத்தம், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் அமைக்கவும், திருவிழா காலங்களில் சரக்கு வாகனங்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்புவது, பொழுது போக்கு ராட்டினங்கள் போதிய இடைவெளியில் அமைப்பது, ராட்டினம் பயன்படுத்தும் 50 பேருக்கு விபத்து காப்பீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. டி.ஆர்.ஓ., பொன்னம்மாள், அறநிலைய துறை உதவி ஆணையர் சிவலிங்கம், ஆர்.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன் (உத்தமபாளையம்), ஆனந்தி (பெரியகுளம்), கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.