பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
02:04
சேலம்: எல்லைப்பிடாரியம்மன் கோவில் தீ மிதி விழாவில், ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அக்னி குண்டத்தில் இறங்கும் அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. மணக்காடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட் வழியாக, அம்மன் திருவீதி உலா வந்து, அக்னி குண்டத்தை வந்தடைந்ததும், தீபாராதனை காட்டி, பூசாரி முதலில் தீ மிதித்தார். பின், குழந்தை பாக்கியம் பெற, திருமண தடை நீங்க என, பல்வேறு வகை வேண்டுதல் நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தீ மிதித்தனர். இந்த விழாவை, ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். இதனால், போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது.
* ஆட்டையாம்பட்டி அருகே, நைனாம்பட்டி மாரியம்மன் கோவில் முன், காலை, 6:00 மணிக்குமேல், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். 10:00 மணிக்கு, முனியப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.அதேபோல், அரியானூர் அருகே, அரியாம்பாளையம் மாரியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டனர்.
* ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 20க்கும் மேற்பட்ட கோவில்களில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, தீ மிதித்தும், அலகு குத்தியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.