சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள கொடிமர பீடத்திற்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தினார்.
சபரிமலையில் பழைய கொடிமரம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய பணியாக கொடி மர பீடக்கல் தயார் செய்யும் பணி செங்கன்னுார் அருகே திருச்சிற்றாற்று என் இடத்தில் நடைபெற்று வந்தது. சதாசிவன் ஆச்சாரி தலைமையில் இந்த பணிகள் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில், பீடக்கல் பவனியாக புறப்பட்டது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஆலப்புழா, பத்தணந்திட்டை மாவட்டங்களில் பல்வேறு கோயில்களில் வரவேற்பை பெற்ற பின்னர் பம்பை வந்தடைந்தது. இந்த பீடக்கல் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தி ஸ்தாபிக்கப்பட்டது. தங்க கொடிமரத்தில் பதிக்கப்படும் தங்க தகடுகள் தயாரிக்கும் பணி 9ம் தேதி பம்பையில் தொடங்குகிறது. மொத்தம் 9கிலோ 160 கிராம் தங்கம் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 25-ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.