பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
12:04
பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள் கிரிவீதி, சன்னிதிவீதி ஒருவழிபாதை தடுப்புகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் குவிந்த பக்தர்கள் இரவு 10 மணிக்குமேல் மலைக்கோயிலுக்கு யானைப் பாதைவழியாக செல்ல அனுமதிக்கவில்லை, தரிசனத்திற்காக பக்தர்கள் வடக்குகிரிவீதி, சன்னதிவீதி தடுப்புகளில் சிக்கிகொண்டு, குழந்தையுடன் அதிகாலை வரை குடிக்கதண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இதேப்போல பகலிலும் தடுப்புகளில் ஒருமணி நேரம் வரை சிறைவைக்கப்பட்ட பக்தர்கள் கிரிவீதி, சன்னிதி வீதியில் குடிநீர் வசதியின்றியும், வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர்.
மலைக்கோயிலில் கூட்டநெரிசலை தவிர்க்க தடுப்பு அமைத்துள்ள கோயில்நிர்வாகம், போலீசார் அதில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, நிழற்கூரைவசதி செய்துதரவேண்டும். அதற்குபதிலாக குடிநீர், கழிப்பறை வசதியுள்ள குடமுழுக்கு நினைவு அரங்கு, யானைப்பாதை வழிகளில் உள்ள தடுப்புகளில் காத்திருக்க வைக்கலாம். விஸ்வ இந்துபரிசத் நகரசெயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,"கூட்டநெரிசலை கட்டுபடுத்துகிறோம் என்ற பெயரில் பக்தர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். நேற்று சன்னிதி வீதியில் வெயிலில் பக்தர்கள் மயங்கிவிழுந்தனர். அவர்களுக்கு தண்ணீர் கூட இல்லை, வர்த்தகர் தான் உதவி செய்தனர். இப்பிரச்னை தொடர்பாக வர்த்தக சங்கம் சார்பில் கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை,” என்றார்.