பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
12:04
அழகர்கோவில்:அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோவில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஏப்., 6ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. காலையில் ஸ்ரீதேவி, பூமா தேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருடன் சர்வ அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். காலை 10:30 மணிக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு, மேள, தாளம், வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவங்கள் துவங்கின.
காலை 10:35 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கோ பூஜையும் நடந்தது. பின் சுவாமிகளின் திருக்கல்யாண பட்டாடை, சீர்வரிசை பொருட்கள் கோயிலை சுற்றி எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க திருக்கல்யாணம் நடந்து.
சுந்தரராஜ பெருமாள் கரங்களில் இருந்த மங்கள நாண்களை 3 முறை உயர்த்தி காண்பித்த பட்டர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கு அணிவித்தனர்.
மஞ்சள், கயறு, குங்குமம் கொண்ட பிரசாத பாக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
சோலைமலை முருகன் கோயில்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயில் விசேஷ பூஜை நடந்தது. 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மூலவர் முருகப் பெருமானுக்கு வைர கிரீடம், வைர வேல் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.