பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
06:04
கிருஷ்ணகிரி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி, ஜெகதேவி, பர்கூர், தேவிரஅள்ளி,
சுண்டகாப்பட்டி, பேறுஅள்ளி உட்பட, மாவட்டத்தில் உள்ள பல முருகன் கோவில்களில், ஐந்து நாட்களுக்கு முன் கொடியேற்றப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வந்தது. பங்குனி
உத்திரமான நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை முதல் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்திக் கொண்டும்,
உடலில் எலுமிச்சை பழங்களை குத்திக் கொண்டும், மேள தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தேவிரஅள்ளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக வந்து, சுவாமி பக்தர்களுக்கு அருள்
பாலித்தார்.
* அரூர் அடுத்த கவுப்பாறையில் உள்ள முருகன் கோவிலுக்கு, ஏராளமானோர் காவடி எடுத்து வந்தனர். 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், டிராக்டர், கார், மினிசரக்கு
வாகனங்களை ஊர்வலமாக இழுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். கார்த்திக் என்ற பக்தர், தனது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில், உடல் முழுவதும், 501 எலுமிச்சை பழங்களை குத்தி வந்தார். இதேபோல், தர்மபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அரூர் அடுத்த கைலாயபுரம், எல்லப்புடையாம்பட்டி, ஒடசல்பட்டி, கூக்கடப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பூதநத்தம், பொம்மிடி, வெங்கடசமுத்திரம், மோளையானூர் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா வெகு
விமர்சையாக நேற்று நடந்தது.
* வேலூர் அடுத்த வெங்கடாபுரத்தில் உள்ள தீர்த்தனகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில், 308 பால்குடம் ஊர்வலம், அபிஷேகம் நேற்று நடந்தது. கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில், வடிவேல் சுப்பிரமணியருக்கு பால் குடம் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா கணபதி யாகம், திருக்கல்யாணம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.