பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
11:04
திருத்தணி: திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகமும் நடந்தது.
இதுதவிர தினமும் உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், மாலை, 6:30 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, அக்னி குண்டத்தில் தீ மிதித்தனர். அப்போது, பூகரகம் கொண்டு வந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மோகன், 45 மற்றும் வெங்கடேசன், 40 ஆகிய இருவரும் அக்னி குண்டத்தில் இறங்கிய போது கால்தவறி குண்டத்தில் விழுந்தனர். இதில், இருவரின், வலது கால்கள் குண்டத்தில் புதைந்தது.இதையடுத்து அங்கியிருந்த பக்தர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளித்து இருவரையும் மேல்சிகிச்சைக்காக, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று, காலை 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகத்துடன் இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நிறைவடைந்தது.