பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
12:04
ராக்கிப்பட்டி: சேலம், ராக்கிப்பட்டி அருகே, செங்கோடம்பாளையம் சென்றாய பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, மலையை சுற்றி இழுத்து வந்தனர்.
செங்கோடம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் மலைக்கோவிலில், இந்தாண்டு பங்குனி மாத தேர்த்திருவிழா கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், இரவு, 9:00 மணிக்கு கருட வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், குதிரை வாகனம் என, சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு மலைமேல் உள்ள கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயசுவாமி புறப்பாடாகி தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு முதலில் சிறிய தேரில் இருந்த, ஆஞ்சநேயரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துக்கொண்டு, மலையை சுற்றி வந்து நிலை சேர்த்தனர். அதன் பின், பெரிய தேரை கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து மலையை சுற்றி இழுத்து வந்தனர். தேர் நிலை சேர்ந்ததை, பக்தர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். தேரோட்டத்தை காண ஆட்டையாம்பட்டி, ராக்கிப்பட்டி, புதுப்பாளையம், சீரகாபாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு வாணவேடிக்கையுடன் சத்தாபரண ஊர்வலம், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் தேர்த்திருவிழா முடிகிறது