பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
12:04
ஆர்.கே.பேட்டை: பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் நிறைவாக, நேற்று முன்தினம், மட்டவளம் கோவத்ச நாதேஸ்வர சுவாமி, தெப்பலில் உலா எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, மட்டவளத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி உடனுறை கோவத்ச நாதேஸ்வரர் கோவில், இந்த கோவிலின் புஷ்கரணி, 2015ல் துார்வாரி சீரமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அந்த ஆண்டு முதல், மீண்டும் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்த பங்குனி உத்திரம் பிரம்மோற்சவத்தில், 7ம் தேதி இரவு, திருக்கல்யாணம் நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை சக்கர ஸ்தானம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, தெப்பலில் உற்சவர் கோவத்ச நாதேஸ்வர சுவாமி, எழுந்தருளினார். மட்டவளம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பாலசமுத்திரம், ராசபாளையம், வெங்கல்ராஜி குப்பம், ஆனந்தவல்லிபுரம், அம்மையார்குப்பம், கதனநகரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று, காலை 9:00 மணிக்கு, சாந்தி அபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது.