கோபி: கோபி மேட்டுவலவு வள்ளி யம்மன் கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 13ல், பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மேட்டுவலவு, வீராசாமி வீதி, சுப்பண்ணன் வீதி, பாரியூர் சாலை பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று மாவிளக்கு எடுத்தனர். மஞ்சள் புடவை உடுத்திய சிறுமி ஒருவர், கையில் வேப்பிலையுடன் கன்னிசாமியாக ஊர்வலம் வந்தார். அவருக்கு பெண் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வணங்கினர். காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதனால், மேட்டுவலவு மற்றும் சரவணா தியேட்டர் சாலை பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.