பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
குளித்தலை: வடசேரி கிராமத்தில் நடந்த தீமிதிதிருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குளித்தலை அடுத்த, வடசேரியில், பிடாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன், சக்தி மாரியம்மன், பாம்பலம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த
கோவில்களுக்கு, வடசேரி கிராம மக்கள் சார்பில், ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன், காப்புக் கட்டி, பால் குடம் எடுத்து துவங்கியது. பின்னர், பிடாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன், சக்தி
மாரியம்மன் மற்றும் பாம்பலம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, வெவ்வேறு நாட்களில் தனித்தனியே கரகம் பாலித்து சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் சார்பில், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அலகு குத்துதல், மொட்டை அடித்தல்
போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்நிலையில், சக்தி மாரியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.