பதிவு செய்த நாள்
09
நவ
2011
10:11
பேரூர் : தொடர்மழையால், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் சிதிலமாகி வருகிறது; இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். சிவன் தலங்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில், வருடம் தோறும், பங்குனி உத்திரத்திருவிழா சிறப்பாக நடக்கும். விழாவில், பட்டீஸ்வர பெருமானும், பச்சைநாயகி அம்மனும் சமேதரராக தேரில் அமர்ந்து, பேரூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். தேர்த்திருவிழா முடிவடைந்து ஏழு மாதங்களுக்கு மேலாகியும், கோவில் நிர்வாகம் சார்பில், தேருக்கு இதுவரை தகரஷீட் பொருத்தப்படவில்லை. கடந்த இரு வாரமாக, இப்பகுதியில் பெய்யும் தொடர்மழையில் தேர் நனைந்து வருகிறது. தேரில் இடம்பெற்றுள்ள அரிய மரச்சிற் பங்களும், மரபொம்மைகளும் பாதிக்கப் பட்டுள்ளன. தேரின் நான்கு இரும்பு சக்கரங்களும் மழையில் நனைந்து துருப்பிடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பேரூர் கோவில் உதவி கமிஷனர் கிருஷ்ணன் கூறுகையில்,""தேருக்கு தகரஷீட் அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்க உள்ளது,என்றார்.