பதிவு செய்த நாள்
09
நவ
2011
10:11
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நாளை நடக்கிறது.ஈஸ்வரன் கோவில்களில், ஸ்வாமிக்கு நாள்தோறும், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடக்கும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமி தினத்தில் மட்டும், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்ன அலங்காரத்தில் சிவனை வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். அன்ன ஈஸ்வரனின் பலன், மற்ற உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசாத அன்னத்தை, கோவில் குளத்திலும், ஆற்றிலும் கரைப்பது வழக்கம்.நாளை ஐப்பசி பவுர்ணமியையொட்டி, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில், மாலை 6 மணிக்கு அன்னாபிஷேக விழா நடக்கிறது. மேலும், நட்டாற்றீஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு திருநகர் காலனி கற்பக விநாயகர் கோவில், பார்க் ரோட்டில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், சோழீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், சென்னிமலை கைலாசநாதர் கோவில், பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடக்கிறது.