பதிவு செய்த நாள்
02
மே
2017
04:05
பகவான் கிருஷ்ணன் தன்னுடைய கீதையில் மனிதர்களின் குணங்கள், அவர்களின் உணவு போன்ற பல விஷயங்களையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் கூறி இருக்கிறார். அதேபோல் தவத்தையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் கூறி இருக்கிறார். பிறரை அழிக்க வேண்டும் என்பதற்காக, தன்னைத்தானே வருத்திக் கொண்டு செய்யும் தவம், தாமச வகையைச் சேர்ந்தது. தாமச குணம் உள்ளவன், பொறாமையினால் தன்னுடைய தாழ்ந்த சுபாவத்துக்கு இடம்கொடுத்து, பிறரை அழிப்பதற்கான காரியங்களில் ஈடுபடுகிறான். அவன் என்னதான் தவமும் பூஜையும் செய்தாலும், அவனுடைய நோக்கம் பிறருக்குத் தீமையை ஏற்படுத்துவதே என்பதால், அந்தத் தவம், தாமச தவம் ஆகும். அதனால் ஒரு நன்மையும் கிடையாது.
அடுத்ததாக, ராஜஸ குணம் கொண்டவனின் தவம், ராஜஸ குணம் கொண்டவன், தான் செய்யும் தவம், பூஜை அன்னத்தின் பலனையும் தான் ஒருவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவான். அநித்தியமான விஷய போகங்களில் ஈடுபாடு கொண்டு செய்யும் தவம் இது என்பதால், இம்மாதிரியான, தவத்தினை மேற்கொள்பவன் மறுபடியும் மறுபடியும் பிறப்பு - இறப்புச் சூழலில் சிக்கித் தவிக்கிறான். ஆனால், உயர்ந்த நம்பிக்கையுடனும், யோகத்திலே உறுதி பெற்றவனாக, தன்னலம் கருதாமல் செய்யும் தவம், சாத்விக வகையைச் சேர்ந்தது. இதுவே சிறந்த தவம் ஆகும். இதனால் உள்ளத் தூய்மை உண்டாவதுடன், இறைவனின் அன்புக்கும் பாத்திரமாகி, பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைகிறான்.