Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ... மூன்று நாள் விளக்கேற்றுங்க... முப்பது நாள் விளக்கேற்றிய பலனை பெறுங்க... மூன்று நாள் விளக்கேற்றுங்க... முப்பது ...
முதல் பக்கம் » துளிகள்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன் கிடைக்குமோ...அதே பலன் கிடைக்க...
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 நவ
2011
01:11

கிரி...கிரி... கிரி வலம்...

கிரி என்பது மலை என பொருள்படும். கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரி முதலியனவும் கிரியாகிய மலையை குறிக்கும் சொல்லாகும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் (மலைக்கு வலபக்கத்தில் தொடங்கி சுற்றி வழிபட்டு வருதல்) என்பதாகும்.

கிரிவழிபாடு

இறைவழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். இறையை வழிபடுவது போல மலையை ஆன்மாக்கள் மகிழும்படி எழுந்து மகாமேருமலையை வலமாக சுற்றிவந்து வழிபடும் பல சமயத்தாரும் வழிபடுவதும் காலத்தை கடந்த பழமையானதாம். இவ்வகையில் கையிலை மலையை வழிபடுவது காலத்தை கடந்த வழிபாடாக உள்ளது. சிவசிந்தனை தோன்றிய போதே கையிலை மலையை பற்றிய சிந்தனையும் தோன்றிவிட்டது. வழிபாடும் தோன்றி விட்டது. சூரியன் கையிலை மலையை வலம் வந்து நாள் தோறும் வழிபடுகிறான் என்கின்றனர். இதனை நக்கீரர்

உலக முவப்ப வலநோபு திருதரு
பலா புகழ் ஞாயிறு
   
 
திருமுருகற்று படைவரிகளில் உணர்த்துவதை காணலாம்.

புனிதமான ஸ்தலத்தையோ, தீர்த்தத்தையோ, மலையையோ, வனத்தையோ, தெய்வீகம் உள்ள இடத்தையோ சுற்றி வருவதே வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படும். அதேபோல் ஒரு மூர்த்தியையோ (கடவுளையோ) வில்வமரம் போன்ற தெய்வீக மரத்தையோ துளசி செடியையோ சுற்றி வருவதும் கூட வலம் வருதல் அல்லது பிரதட்சணம் எனப்படுகிறது. இவ்வாறு பக்தர்கள் எதையாவது ஒன்றை சாதாரண முறையில் சுற்றி வந்தால் அதை வலம் வருதல் அல்லது பிரதட்சணம் என்று அழைப்பர். இதையே மிகப்பெரிய அளவில் செய்தால் அது பரிக்கிரம் அல்லது கிரிவலம் எனப்படுகிறது.

கிரிவலம் சுற்றுவதன் பெருமை: நாம் உணராவிட்டாலும் கூட, ஒவ்வொரு நொடியுமே, நாமும், நம் உலகமும், அகண்டாகார பிரபஞ்சமும் சுழன்று கொண்டேயிருக்கிறோம்.

நகர்வின்றி நிகழ்வில்லை. சுழற்சியின்றி சக்தியில்லை.

சிறிய சைக்கிள் டைனமோ முதல், ஆலைகளில் உள்ள பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் அணைகளில் உள்ள பிரம்மாண்டமான டர்பைன்கள் வரை, சக்தி உருவாக்கிகள் யாவுமே சுழற்சியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மின் கடத்தி இழைகளையும், காந்தத்தையும், ஒன்றை அசைவற்ற நிலையிலும், மற்றதை சுழலும் படியும் அமைக்கும் போது தான் மின்சக்தி உருவாகிறது. ஆலயத்தை வலம் வரும் வழிபாடும் இவ்வடிப்படையில் உருவானதே. ஜெனரேட்டரில், காந்தத்தின் சக்தியை அல்லது மின் இழையின் பரிமாணத்தை மட்டும் அதிகரித்தால் போதாது. இரண்டுக்குமிடையே சுழற்சி உறவை உருவாக்கினால்தான் மின்சாரம் கிடைக்கும். அது போலவே தான் இறைத் திருவுருவங்களுக்கு விரிவான பூசைகள் நடத்துவதால் மட்டுமோ, அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் மட்டுமோ, முழு நன்மையையும் பெற்றிட இயலாது. அடியவர்கள் ஆலயத்தை வலம் வரும் போதுதான் முழுப்பயனையும் அடையும் நிலை உருவாகிறது. பூசித்த பலனை பிரதக்ஷிணத்தால் அடை என்பது பழமொழி. இதனால் தான் வீட்டில் வழிபடும் போதும், திருவுருவைச் சுற்ற முடியாத இடங்களிலும் ஆத்ம பிரதட்சிணமாவது செய்யுமாறு கூறப்படுகிறோம். திருச்சுற்று கூட தெய்வீகமும் கூடும். டைனமோவை ஓரிரு முறை சுழற்றும் போது மின்னோட்டம் ஏற்பட்டாலும், அது நம் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விளக்கில் ஒளியைக் கொடுப்பதில்லை. பன்முறை சுற்றும் போதே திருப்தியான பலன் கிடைக்கிறது.

மேலும் சைக்கிளில் கால் சுழற்றுமிடத்தில் உள்ள பல் சக்கரத்தின் அளவு பெரிதாக பெரிதாக, பின் சக்கரத்தின் சுழற்சி கூடி, சைக்கிள் செல்லும் வேகம் அதிகரிப்பது போல, ஆலயங்களிலும் வெளிக்கோடியிலுள்ள பெரிய பிரகாரத்தை வலம் வரும்போது நன்மை மிக அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தான் முன்னோர்கள், இயன்ற வரையில், பல ஆலயங்களிலும் 5சுற்று, 7 சுற்று என பல சுற்றுக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இத்தகு அமைப்பு உள்ள தலங்களை பஞ்சாவரண/சப்தாவரண/நவாவரண ÷க்ஷத்ரங்கள் என்று போற்றி வந்திருக்கின்றனர். இச்சுற்றுக்களை வலம் வருவதின் மேன்மையை நமக்கெல்லாம் நினைவுபடுத்துவதாக, இன்றும் ஒருசிலர், மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் முதலில் சித்திரை வீதியையும், அடுத்து ஆடி வீதியையும், பின்னர் 2வது உள் பிரகாரத்தையும், அதற்கும் பிறகு முதல் உள் பிரகாரத்தையும் வலம் வந்த பின்பே அம்மனையோ, சுவாமியையோ தரிசிப்பதைக் காணலாம். பணிப் பளுவினால், கால அவகாசமின்மையால், எல்லோராலும், எல்லா நாட்களிலும், எல்லாச் சுற்றையுமோ, பெரிய பிரகாரத்தையோ வலம் வர இயலாது என்றாலும் இயன்றவரை சிறிய திருச்சுற்றையாவது சில முறையாவது வலம் வருதல் நல்லது. வாரம் ஒருமுறை / மாதம் ஒரு முறையாவது பெரிய திருச்சுற்றை வலம் வருதலை எல்லோரும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

கிரிவலத்தின் நன்மை: தேக ஆரோக்கியத்தை காப்பதற்காக தினமும் பலர்  மைதானத்திலும்  ரோடு ஓரங்களிலும் நடக்கின்றனர். இது மிகவும் நல்லது. ஆனாலும் உடல் நலத்துடன், அமைதியும், ஆன்ம பலமும் அடைய வேண்டும் என்று பலரும் உணரத் துவங்கியிருப்பதால் தான், இன்று ஆலயங்களையும் மலைகளையும் வலம் வருவது கூடியுள்ளது. சிலரது வீட்டருகே சுற்றி வரும் அளவிற்கு மலை இல்லாமல் இருக்கலாம். எனவே அருகில் இருக்க கூடிய கோயில் உள்ள இடங்கள் வரை இறை சிந்தனையுடன் நடந்து சென்று கோயிலையும் வலம் வந்தால், உடல் நலமும் கிடைக்கும். உள்ளமும் பலம் பெறும். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை அருகிலுள்ள கிரிவலம் செல்லக்கூடிய மலைக்கோயில் வாசல்  வரை வாகனத்தில் சென்று, அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தெய்வபலம் பொருந்திய மலையை கிரிவலம் செய்தால் உடலும் மனமும் வலிமை பெறும்.
விடுமுறையென்றால், வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சியை மட்டுமே பார்க்காமல், குடும்பமாக, குழுவாக, இயற்கை வளம் மிகுந்த ஊர்களுக்கும், இறையருட்தலங்களுக்கும் சென்று வருவது மனதுக்கு நிம்மதி கிடைக்கும். இது போலவே, கிரிவலம் செல்வது கூட பவுர்ணமியில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களில் சென்று வருவது நல்லது.

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும். அக்குபஞ்சர் முறையில் காலில் சிறு கல் குத்துவதில் இரத்த ஓட்டம் சீராக அமையும். கிரிவலம் செல்பவர்களின் தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வது நல்லது. ஆண்கள் கிரிவலம் செல்லும் போது சட்டை அணியாமல் செல்ல வேண்டும். சந்திரனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

மலையை வலம் வர மனது விரியும்
நடந்து வழிபட தேக நலனும் கூடும்
நாலு பேரோடு நடக்க நல்லுறவும் பெருகும்
அவனைப் பணிய, அவனடியவரை நினைக்க
அமைதியும் கூடும், அகஒளியும் பெருகும்.

திருவண்ணாமலை கிரிவலம்: ஒரு சில பக்தர்கள் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இடைவிடாது திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலை தலம், சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். இங்குள்ள மலையடி வாரத்தின் கீழ் சிவாலயம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை மீது ஏற்றப்படும் தீபத்தில் ஈஸ்வரன் அருள் பாலிக்கிறார். இங்கு மலையே சிவலிங்கமாகும். இந்த மலையைச் சுற்றி வருவது பெரும் புண்ணியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பவுர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செய்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையில் தான் அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்றுள்ளனர். பவுர்ணமியன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவது மரபாக இருந்தாலும் கூட, பிறநாட்களிலும் நாம் அந்த மலையை வலம் வந்து வழிபடலாம்.

வார நாட்களில் கிரிவலம் சுற்றினால் ஏற்படும் பலன்கள்:

ஞாயிறு: மரணத்துக்குப் பின் சிவபதம் (கைலாயம்) சேர்தல்
திங்கள்: செல்வவளம் கிடைத்தல்
செவ்வாய்: வறுமை, கடன் நீங்குதல்
புதன்: கல்வியில் வளம் (பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுடன் புதன்கிழமையில் வலம் வரலாம்)
வியாழன்: தியானம், யோகா முதலியவற்றில் பற்று ஏற்படுதல்
வெள்ளி: விஷ்ணுலோகமான வைகுண்டம் அடைதல்
சனி: கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
அமாவாசை நாட்கள்: சிவனின் பரிபூரண அருள், மன நிம்மதி கிடைத்தல் தொடர்ந்து 48 நாட்கள் தம்பதி சமேதராக சுற்றுதல்........ குறையிருந்தாலும் மகப்பேறு கிடைத்தல்

பக்தர்கள் எல்லோரும் திருவண்ணாமலை போன்ற சில கோயில்களுக்கு மட்டுமே பவுர்ணமி அன்று கிரிவலம் செல்கிறார்கள். ஆனால் பவுர்ணமி கிரிவலம் என்பது அனைத்து கடவுளுக்குமே முக்கியமானது. கோயில்களில் மதில் சுவர்களை எழுப்பி உருவாக்கப்படும் பிரகாரங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை என்றால், மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை இயற்கையாகவே கிடைத்ததாகும். திருவண்ணாமலையில் மட்டுமின்றி மலையுள்ள ஊர்களில் எல்லாம், அங்குள்ள ஆலயத்தை தரிசிக்கும் முன்பு மலையை கிரிவலம் வந்து வணங்குவது மிக நன்று. கைலாயத்திலுள்ள கைலாச நாதனையும், தமிழகத்திலுள்ள அண்ணாமலையானையும் மட்டுமின்றி, விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்மனின் ஆலயங்கள் மலைமீது உள்ள அமைந்திருந்தாலும்,  அல்லது மலைக்கு கீழே குடைவரைக்கோயிலாக அமைந்திருந்தாலும் அந்த மலையை பவுர்ணமி நாட்களில் சுற்றி வருவது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைமேல் உள்ள மருந்தே மாமருந்து என்பதற்கு இணங்க சுவாமி அருளால் எல்லா தோஷங்களும் விலகும். தற்போது பக்தர்கள் விநாயகரை பிள்ளையார்பட்டியிலும், முருகனை பழநி, திருப்பரங்குன்றத்திலும், பெருமாளை வேலூர் சோளிங்கரிலும், அம்மனை திண்டுக்கல் அபிராமியம்மை கோயிலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கிரிவலம் செல்லும் மேலும் சில கோயில்கள்: 

திருவள்ளூர்: திருத்தணி

வேலூர்: சோளிங்கர், ரத்தினகிரி, வள்ளிமலை

காஞ்சிபுரம்: திருநீர் மலை, சிங்கபெருமாள், திருக்கச்சூர் கச்சபேஸ்வரர்
திருக்கழுக்குன்றம்

திருவண்ணாலை: அருணாசலேஸ்வரர், பர்வதமலை, தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்

கிருஷ்ணகிரி: ஓசூர் சந்திரசூடேஸ்வரர்

சேலம்:  வடசென்னி மலை, கஞ்ச மலை

கடலூர்:  பாடலீஸ்வரர், விருத்தாச்சலம், சிதம்பரம் நடராஜர், திருவதிகை வீரட்டானேஸ்வரர்

ஈரோடு: கதித்தமலை, சென்னிமலை

திருச்செங்கோடு: அர்த்தநாரிஸ்வரர்

பெரம்பலூர்: செட்டிகுளம் முருகன்

கோவை: வெள்ளியங்கிரி, மதுக்கரை தர்மலிங்ககேஸ்வரர், கிணத்துக்கடவு முருகன், சரவணம்பட்டி, ரத்தினகிரி, செஞ்சேரி மலை

திருப்பூர்: அலகுமலை

திருச்சி:மலைக்கோட்டை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர், ஈங்கோய்மலை

கரூர்:  தான்தோன்றி மலை, ஐயர் மலை

தஞ்சாவூர்: சுவாமி மலை, நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர்

நாகப்பட்டினம்:  சீர்காழி சட்டநாதர்

புதுக்கோட்டை: விராலி மலை, திருமயம் சத்தியகிரிஸ்வரர், தேனிமலை முருகன்

மதுரை:  திருப்பரங்குன்றம், யானை மலை

திண்டுக்கல்:அபிராமி அம்மன், பழனி

தேனி : பெரியகுளம் கைலாச நாதர்

சிவகங்கை: பிரான்மலை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி

தூத்துக்குடி: கழுகுமலை

திருநெல்வேலி:  பண்பொழி முத்துகுமாரசுவாமி

கன்னியாகுமரி: வேலி மலை குமாரசுவாமி.

இது தவிர தமிழகத்தில் புகழ்பெற்ற பல கோயில்களில் கிரிவலம் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கிரிவலம் வரும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?

மலையை வரும்போது வலதுபுறமாக வருவதும், மேல் சட்டை அணியாமலும் தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வரவேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது  உண்மை. உடையை உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வருவதும் தவிர்க்க வேண்டியதாகும். மேலும் கிரிவலம் வரும்போது மனதில் இறைவன் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்வதை தவிர்த்து நடந்துதான் செல்ல வேண்டும். எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும். கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது. ஒரு சிலர் கிரிவலம் சுற்றுகிறேன் என்ற பேரில் பேசிக் கொண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டும், கொஞ்சம் கூட இறை சிந்தனை இல்லாமல் சுற்றி வருகின்றனர். மேலும்  குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் கிரிவலம் சுற்றுவதற்காக கூட்டத்தை ஏற்படுத்தி அந்த ஊரை குப்பை மேடாக்குவதுடன் அந்த ஊர் மக்களுக்கும் தொந்தரவு ஏற்படுத்துகின்றனர். கிரிவலம் சுற்றி வரும் மக்கள் கோயிலுக்குச் செல்லாமல் கிரிவலத்தை மட்டும் ஜாலியாக சுற்றி விட்டு ஊர் வந்து சேருகின்றனர். இதனால் கோயிலுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. இதற்கு பதிலாக பக்தர்கள் அவரவர் ஊரில் கிரிவலம் செல்லக்கூடிய கோயில்களில் ஏற்கனவே கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்களுடன் சேர்ந்து நிம்மதியாக இறை சிந்தனையுடன் கிரிவலம் சென்று கோயிலுக்குள்ளும் சென்று இறைவனை தரிசித்து விட்டு முழு பலனுடன் வீடு வந்து சேரலாம்.

பவுர்ணமியின் தனிச்சிறப்பு: சந்திரன் படிப்படியாக, ஒளி குறைந்து, முற்றுமாக, நம் கண்ணுக்குத் தென்படாத தினத்தை அமாவாசை என்றும், அதன் பிறகு, படிப்படியாக ஒளி கூடி, முழு இரவும் முழுமையாகத் தென்படும் நாளை பவுர்ணமி என்றும் கூறுகிறோம். பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால் தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியையும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுவதை அறிவோம்.  உதாரணமாக, சதுர்த்தி விநாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன் என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.

காலத்தைக் கணக்கிடும் பல முறைகளில், சூர்யமானம், சந்திரமானம் என்பவை மிக முக்கியமானவை. பொதுவாக, வடபாரத மாநிலங்களில் தான், சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டாலும், சூரியனின் நகர்வைப் பின்பற்றும் தமிழகத்திலும் பலமுக்கிய செயல்பாடுகளுக்கு நிலவின் நிலையும் கருதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறைவழிபாட்டில், அதுவும், ஆலய வழிபாட்டில் பவுர்ணமியும் அதை ஒட்டிய நட்சத்திரமுமே மிகவும் மேன்மையாகக் கருதப்பட்டிருக்கின்றன. சித்திரைத் தேர் முதல், பங்குனிக் காவடி வரை, லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்கள் அநேகமாக பவுர்ணமி நாளன்றே நடைபெறுகின்றன.

மாதம் தோறும் வரக்கூடிய ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஒரு சிறப்பு உள்ளது. உதாரணத்திற்கு ஒரு சில சிறப்புக்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமி : (சித்திரை நட்சத்திரம்) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இழங்கும் விழா சிறப்பு.

வைகாசி பவுர்ணமி: (விசாகம் நட்சத்திரம்)  முருகன் அவதரித்த நாள்.

ஆனிப் பவுர்ணமி : (மூலம் நட்சத்திரம்) இறைவனுக்கு மா, பலா, வாழை போன்ற பல கனிகள் படைக்கும் நாள். திருவையாற்றில்  சிறப்பு.

ஆடிப் பவுர்ணமி : (பூராடம்/உத்ராடம் நட்சத்திரம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில்  சிறப்பு.

ஆவணிப் பவுர்ணமி : (அவிட்டம் நட்சத்திரம்) வட இந்தியாவில் ரக்ஷõபந்தனம் என்றும், கேரளத்தின் ஓணம் பண்டிகை என்றும் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி பவுர்ணமி : (பூரட்டாதி/உத்திரட்டாதி நட்சத்திரம்) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரனுக்கு வட இந்தியாவில் சிறப்பான பூஜை.

ஐப்பசி பவுர்ணமி : (அசுவதி நட்சத்திரம்) வட இந்தியாவில் மகாலட்சுமி விரதமும், தென் இந்தியாவில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விசேஷம்.

கார்த்திகைப் பவுர்ணமி : (கார்த்திகை நட்சத்திரம்) திருவண்ணாமலையில் நடைபெறும் தீருக்கார்த்திகை தீபம் சிறப்பு.

மார்கழிப் பவுர்ணமி : (திருவாதிரை நட்சத்திரம்) சிவன் நடராஜராக காட்சியளித்த நாள்.

தைப் பவுர்ணமி : (பூசம் நட்சத்திரம்) சிவனுக்கும், முருகனுக்கும் பெருவிழா நடத்தும் நாள்.

மாசிப் பவுர்ணமி : (மகம் நட்சத்திரம்) மாசி மகத்தன்று கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் சிறப்பு.

பங்குனிப் பவுர்ணமி : (உத்திரம் நட்சத்திரம்) சிவன் பார்வதி திருமணம் போன்ற பல முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

பவுர்ணமி இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்ற காரணத்தினால் தான் பவுர்ணமியில் சுற்றும் கிரிவலமும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
சோமவார விரதம் என்பது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்கபடுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar