பதிவு செய்த நாள்
05
மே
2017
01:05
காஞ்சிபுரம்: காயார் கிராமத்தில் உள்ள, வரதராஜபெருமாள் கோவிலின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதால் பக்தர்கள் கவலைஅடைந்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பராமரிப்பின் கீழ், கொளத்துார் கல்யாண ரங்கநாதபெருமாள் கோவில், சிறுதாவூர் பூதகிரீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், காயார் வரதராஜபெருமாள் கோவில் மற்றும் ஆடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. கொளத்துார் மற்றும் காயார் ஆடேஸ்வரர் கோவில் நிலங்கள் அறநிலையத்துறையின் சார்பில், ஆண்டு தோறும் ஏலம் விட்டு கோவில் வங்கி கணக்கில் வருவாய் சேர்க்கப்பட்டு, நித்யபூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், புராதன, காயார் வரதராஜபெருமாள் கோவில் எவ்வித வருவாயும் இன்றி கிடக்கிறது.
இக்கோவிலுக்கு, சொந்தமாக இப்பகுதியில், 5 ஏக்கருக்கும் மேற்பட்ட நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்நிலங்கள், தற்போது சில ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதை , திருப்போரூர் கோவில் நிர்வாகத்தில் உறுதிப்படுத்தி தகவல் உரிமை சட்டத்தில் கோரியவருக்கும் கடந்த , இரு ஆண்டுகளுக்கு முன் பதில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பதிலில் கோவிலுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இப்பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, கோவில் நிலங்களை மீட்டு, கோவிலுக்கு வருவாயை ஈட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, காயார் கிராம சமூகஆர்வலர்கள் மற்றும் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.