வைகாசி மாத வளர்பிறை தசமிக்கு பாபஹர தசமி என்று பெயர். புண்ணிய நாளான ஜூன் 3ல் ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாத சுவாமியை தரிசித்தால் பத்துவித பாவங்களில் இருந்து விடுபடலாம் என ஸ்ரீ ஸ்கந்த புராணம் கூறுகிறது. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நமக்கு பாவம் உண்டாகிறது. பிறர் பொருளை அடைய திட்டமிடுதல், தீய செயல்களை எண்ணுதல், தகுதிக்கு மீறி ஆசைப்படுதல் ஆகிய மூன்றும் பாவங்கள். கடுஞ்சொல், பொய், அவதூறு, அறிவுக்கு பொருத்தமில்லாத பேச்சு இவை நான்கும் வாக்கால் உண்டாகும் பாவங்கள். திருடுதல், பிறரை துன்புறுத்தல், பிறர் மனைவியுடன் சேர்தல் ஆகியவை உடலால் ஏற்படும் பாவங்களாகும். இந்த பத்தில் இருந்தும் விடுபட பாபஹர தசமி நாளில் ராமேஸ்வரம் தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட வேண்டும். செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே நீராடி ராமநாத சுவாமியை வேண்டிக்கொண்டாலும் பாவத்தில் இருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம்.