பதிவு செய்த நாள்
09
மே
2017
02:05
ஆத்தூர்: மழை வேண்டி, மரச்சிற்ப சுவாமி சிலைகளை, கோவில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை நடந்தது.வாழப்பாடி, அக்ரஹாரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தர்மர், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்ற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் ஆகிய சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் மழை வேண்டி கோவில் திருவிழா நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதற்காக, நேற்று முன்தினம் மாலை, திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து, மரச்சிற்ப சிலைகளை தோளில் சுமந்து, மேளதாளத்துடன், மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு, விருந்தினராக அழைத்து வந்தனர். அச்சிலைகளுக்கு, ஐந்து நாட்களுக்கு பூஜை நடத்தி விருந்து படையல் செய்யப்படும்.
திருவிழா நிறைவடைந்ததும், மீண்டும், திரவுபதி அம்மன் கோவிலுக்கு, மரச்சிற்ப சிலைகளை கொடுத்துவிடுவர். இரு கிராமங்களுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த, சுவாமி
சிலைகளை விருந்துக்கு அழைத்து செல்லும் வினோத பழக்கம், பல ஆண்டுகளாக தொடர்கிறது. மன்னாயக்கன்பட்டி மக்கள் கூறுகையில், வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டியில், கோவில் திருவிழாக்கள் நடத்துவதில், பழங்காலம் தொட்டு
ஒன்றாக இருந்து வருகிறோம். மரச்சிற்ப சுவாமி சிலைகளை எடுத்து வந்து, வாழப்பாடி கிராம கோவில்களை நிர்வகிக்கும், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து சென்று விருந்து கொடுக்கப்படும் என்றனர்.