பதிவு செய்த நாள்
11
மே
2017
11:05
கோவை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலையில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகவுள்ள வெள்ளியங்கிரி மலை, தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து, 34 கி.மீ., தொலைவிலுள்ள இந்த மலைப்பகுதி, முழுக்க முழுக்க வனப்பகுதி என்பதால், பிப்.,1 முதல் மே 31 வரையிலான நான்கு மாதங்கள் மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
சித்ரா பவுர்ணமி நாளில், இங்கு லட்சம் பக்தர்கள் கூடுவர். இந்தாண்டு, கடந்த இரு நாட்களில், லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்; மலையெல்லாம் மனிதத்தலைகளாகத் தெரிந்தன. இவர்களில், 300க்கும் அதிகமான சாதுக்களும் பங்கேற்று, கிரி மலையின் உச்சியில் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள, சிவபெருமானுக்கு பூஜைகள் செய்தனர். சிவ பக்தர்கள் அமைப்பு, உண்டியல் உரிமம் எடுத்துள்ளதால், வணிக நடவடிக்கைகள் எதுவுமில்லை. பாரபட்சமின்றி, எல்லா பக்தர்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதி என்பதால், பக்தர்கள் பெருமகிழ்வோடு, ஈசனை தரிசித்தனர்.
தன்னார்வலர்கள் தேவை: மலையில் கடுங்குளிர் இருந்தாலும், மழை இல்லாததால், நீர்ச்சுனைகளில் தண்ணீர் இல்லை; இதனால், பக்தர்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்கள், பெரும் குப்பை மலையாகக் குவிந்துள்ளன. இவற்றை அகற்றுவதற்கு, தன்னார்வலர்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனர். பாலித்தீன் பைகள் பயன்பாடு குறைந்திருந்தாலும், அதையும் மீறி கொண்டு வந்துள்ளோர், அதை ஆங்காங்கே எறிந்திருப்பதால், அவற்றையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்பணி செய்ய முன்வருவோருக்கு, உணவு, தண்ணீர் போன்ற வசதிகளைச் செய்து தர, சிவபக்தர்கள் அமைப்பினர் தயாராக உள்ளனர்.