பதிவு செய்த நாள்
11
மே
2017
11:05
குறிச்சி : மதுக்கரையிலுள்ள தர்மலிங்கேஸ்வரர், வெள்ளலுாரிலுள்ள எமதர்மராஜா கோவில்களில் நேற்று சிறப்பு விழா நடந்தது. சித்திரை மாத பவுர்ணமி முன்னிட்டு தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, கலச வழிபாடு நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலைமுதல் திரளான பக்தர்கள் மலையை வலம் வந்தனர். புனித நீர் கலசங்களை பக்தர்களே எடுத்துச்சென்று, நேரடியாக தர்மலிங்கேஸ்வரருக்கு அபிஷேக வழிபாடு செய்தனர். வெள்ளலுாரிலுள்ள சித்திரகுப்தர், எமதர்மராஜா கோவிலில், சித்திரகுப்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி பூஜை, புண்யார்ச்சனம், 108 குடம் தண்ணீர் அபிஷேகம் நடந்தன. இதையடுத்து தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், நெய் உள்பட சகலவித திரவிய அபிஷேகங்களும் நடந்தன. நேற்று காலை, ஏழு குடும்பத்தார் சார்பில், சித்திரைவாணி பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மதியம் பலகாரமேடையில், பழங்கள், பொங்கல், வெற்றிலை உள்ளிட்டவை படைக்கப்பட்டன. இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.