பதிவு செய்த நாள்
11
நவ
2011
11:11
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை காக்க, ரூ.10 லட்சத்தில் நவீன இடித்தாங்கிகள் பொருத்தும் பணி, இரு நாட்களில் துவங்குகிறது.இருபது ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலின் 5 கோபுர உச்சியிலும் இடித்தாங்கிகள் பொருத்தப்பட்டன. இதையும் மீறி, சில நேரங்கள் இடி விழுந்தபோது, கோபுர சுதைகள் சேதமடைந்தன. ஐந்தாண்டுகளுக்கு முன், கிழக்கு கோபுர உச்சியின் யாழி சேதமடைந்தது. சமீபத்தில், இடி தாக்கியதில், கோயில் உட்பிரகாரங்களில் அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த நிர்வாக அதிகாரி ஜெயராமன், ""கோபுரங்கள் பாதுகாப்பாக உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவீன இடித்தாங்கிகள் பொருத்தப்படவுள்ளன, என்றார்.குடுவை போல் உள்ள நவீன இடித்தாங்கி ஒன்றின் விலை ரூ.2 லட்சம். ஐந்து கோபுரங்களிலும் பழைய இடித்தாங்கிக்கு அருகில் பொருத்தப்படவுள்ளது. இது 50 மீட்டர் சுற்றளவில் எங்கு இடி விழுந்தாலும், அதை கிரகித்து உள்வாங்கும் தன்மை உடையது. இதன்மூலம் கோயில் உட்பகுதியில் இடிவிழாமல் பாதுகாக்கப்படும். சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், இருநாட்களில் பொருத்தும் பணியை ஆரம்பிக்க உள்ளது.