பசுவந்தனை : பசுவந்தனை சுயம்பு கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஆன்மிகம் உண்ணும் உணவு அனைத்தையும் கடவுளாக பார்க்கிறது. அதனால்தான் அன்னம் பரப்பிரம்மம் என்பர் ஞானிகள். உடலை வளர்ப்பதுடன் உள்ளத்தையும் வளர்க்கிறது அன்னம். அதனால் தான் அன்னத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிவாலயங்களில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பசுவந்தனை சுயம்புலிங்கமாய் அருள் பாலிக்கும் கைலாசநாதர் கோயிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜையை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் கணபதி ஹோமம், கணபதி பூஜையை தொடர்ந்து கும்ப கலச பூஜை நடந்தது. கும்ப தீர்த்தத்தால் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உட்பட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் பச்சரிசி அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும், வழிபாடுகளும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.