பதிவு செய்த நாள்
11
நவ
2011
12:11
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலையில் உள்ள ஈஸ்வரன் ஸ்வாமிக்கு, 100 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஐப்பசி மாத பவுணர்மியை முன்னிட்டு கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில், நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. கோபி பச்சைமலை சுப்பிரமணி ஸ்வாமி கோவிலில் உள்ள ஈஸ்வரன் ஸ்வாமிக்கு, 100 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் உள்ள தங்கத்தேர் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மொடச்சூர் சவுந்தரநாயகி சமேத சோமேஸ்வரர் கோவிலில், நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜை, ஹோமம், மகன்யாச ருத்ர ஜெபம், மஹாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணியளவில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பவளமலை முருகன் கோவிலில் உள்ள ஈஸ்வரன் சன்னதி, விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர ஸ்வாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
பவானி: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில், கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும், ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.