உத்ஸவர் என்பது, உத்ஸவ காலங்களில் எழுந்தருளச் செய்யக்கூடியதான மூர்த்தி. மூலவர் என்பது, எப்பொழுதும் கோயிலில் இருக்கக்கூடிய விசேஷமான மூர்த்தி, அந்த மூர்த்தியை வெளியே கொண்டு வர இயலாது என்ற காரணத்தால்தான் உத்ஸவ மூர்த்தியை வைத்துக் கொண்டு, புறப்பாடு உள்ளிட்ட உத்ஸவங்களைச் செய்கிறோம். இருவருமே வணங்கத்தக்கவர்கள். மிகவும் விசேஷமாக மூலவருக்குத்தான் அங்கே மகிமை அதிகம். உத்ஸவ காலங்களில் அந்த மூலவரிடம் இருக்கின்ற சாந்நித்யத்தை உத்ஸவருக்குக் கொண்டு வந்து, உத்ஸவரை வழிபடுகிறோம். உத்ஸவர் புறப்பாடாகி வெளியே வந்தால், மூலவரை வழிபடக் கூடாது என்பது நியதி. உத்ஸவ காலங்களில் உத்ஸவ மூர்த்திக்குத்தான் சாந்நித்யம் அதிகம். அச்சமயங்களில் உத்ஸவ மூர்த்தியைத்தான் வழிபட வேண்டும். மற்ற காலங்களில் மூலவருக்கு தான் சாந்நித்யம் அதிகம். அதனால், மூலவரை வழிபடலாம். பெரும்பாலும், இரு மூர்த்திகளையும் சேர்ந்துதான் சன்னிதியில் வைத்திருப்பார்கள். எனவே, இருவரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.