பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
வேலூர்: நெமிலி அருகே கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை, கடத்தி வரப்பட்டதா என, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே, கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன், 52, விவசாயி. இவரது விவசாய நிலத்திற்கு, நேற்று முன் தினம் காலை, 11:00 மணிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது நிலத்தில் இருந்த சிறு பள்ளத்தில், பித்தளையால் ஆன அம்மன் சிலை கிடந்தது. இந்த சிலை கிடைத்த இடத்திலேயே, சிறிதாக தென்னை ஓலையில் கொட்டாய் போட்டு, அதில் சிலையை வைத்து வழிபட்டார். தகவல் அறிந்த அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கூட்டம், கூட்டமாக வந்து அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அரக்கோணம் தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர்கள் அருள், சாந்தி ஆகியோர், நேற்று மாலை, 4:00 மணிக்கு சென்று, சிலையை பறிமுதல் செய்ய முயன்றனர். அவர்களை அங்கிருந்த பெண்கள் தடுத்தனர். அப்போது, பூமியில் கண்டெடுக்கப்பட்ட சிலை அரசுக்கு சொந்தம். இதை எடுத்துச் செல்வதை தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து, சிலையை எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். பின், சிலையை பறிமுதல் செய்து, நெமிலி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன், இந்த சிலையை நேற்று ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறுகையில், ”இது மாரியம்மன் சிலை ஆகும். இதன் உயரம், ஒன்றரை அடி, எடை, 30 கிலோ உள்ளது. இந்த சிலையை இப்போது தான் புதியதாக செய்துள்ளனர்,” என்றார். இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனர். அதில், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சிலையை எந்த கோவிலில் இருந்தோ கடத்தி வந்து, பரசுராமன் விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.