பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
வேலூர்: சித்தூர் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில், ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த, நான்கு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூருக்கு அருகில், ஆந்திரா மாநிலம் சித்தூர் உள்ளது. இங்கு கெங்கையம்மன் கோவில் உள்ளது. வேலூர், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கெங்கையம்மனை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இந்தாண்டு கெங்கையம்மன் கோவில் விழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கெங்கை யம்மன் சிரசு ஊர்வல திருவிழா, அம்மன் கண் திறப்பு, பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் விழா நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கியது. பின் கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபட வசதியாக, சித்தூர் பஜார் வீதியில், நேற்று காலை, 9:00 மணி முதல் வைக்கப்பட்டது. இதில், தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த, நான்கு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சித்தூரைச் சுற்றி உள்ள கிரிம்ஸ்பேட்டை, தொட்டிபள்ளி, கட்டமன்சி, சந்தப்பேட்டை, முருகம்பட்டு, ஓடனபள்ளி, மங்க சமுத்திரம் ஆகிய பகுதிகளிலும், நேற்று கெங்கையம்மன் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து, சித்தூருக்கு, ஆந்திரா மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த, 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி, 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.