பதிவு செய்த நாள்
19
மே
2017
01:05
திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனையாக வழங்கியுள்ள புடவைகள், மூன்றாண்டுகளாக ஏலம் விடப்படாமல் குவிந்துள்ளன. திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகராக போற்றப்படும் கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், காஞ்சிபுரம், சென்னை மற்றும் வட மாவட்டத்தினரின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால், இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கந்தசுவாமிக்கு பக்தர்கள், விலை உயர்ந்த பட்டு மற்றும் மயில் கண் வேஷ்டிகளையும், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு புடவைகளையும் வழங்குகின்றனர்.பக்தர்கள் வழங்கும் புடவைகள் மற்றும் வேஷ்டிகள், சுவாமி, அம்பாள்களுக்கு சார்த்திய பின், சேகரித்து வைக்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை கிருத்திகை நாளில் ஏலம் விடுகின்றனர். அச்சமயம், பக்தர்களும் அவற்றை விரும்பி ஏலம் எடுப்பது வழக்கம். இதனால், கோவிலுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது.ஆனால், கடந்த, மூன்றாண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள புடவைகள் ஏலம் விடப்படாமல் உள்ளதாக கூறப்படுகின்றன. எனவே, கோவில் நிர்வாகத்தினர் இதில் கவனம் செலுத்தி, வைகாசி, ஆடி கிருத்திகை நாட்களில் ஏலமிட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.