பதிவு செய்த நாள்
20
மே
2017
11:05
ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, நேற்று, வெள்ளாத்துாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர். கே. பேட்டை அடுத்த , வெள்ளாத்துார் கிராமத்தில் அமைந்துள்ளது. வெள்ளாத்துாரம்மன் கோவில், வழக்கமாக ஆடி, தை மாதங்களில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக, ஞாயிற்றுக்கிழமை மற்றும் கோடை விடுமுறையில் கூட்டம் அதிகளவில் வர துவங்கியுள்ளது. வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையில், குழந்தைகளுடன் குடும்ப உறுப்பினர்கள், குலதெய்வ கோவிலுக்கு வர விரும்புவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அக்னி நடச்சத்திர காலத்தில்,வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் நந்தவனத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கின்றனர். பின், அங்குள்ள விடுதியில், தங்கி பொழுதை கழிக்கின்றனர். வெயில் குறைந்த பின், மாலையில் புறப்பட்டு செல்கின்றனர். குழந்தைகளுக்கு இந்த கோவிலுக்கு வந்து செல்வது ம னதிற்கு இனிய அனுபவமாக அமைகிறது என்பதால், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோவிலும், தினசரி விழாக் கோலம் காண்கிறது. நேற்று, காலை 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் வெள்ளாத்துாரம்மன் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.