பதிவு செய்த நாள்
20
மே
2017
11:05
அழகர்கோவில், மதுரை மக்களுக்கு நேரில் ஆசி வழங்க வந்த அழகருக்கு 90.42 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்கியது. மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கவும், வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் மே 8ல் கள்ளழகர் திருக் கோலத்தில் மதுரைக்கு சுவாமி புறப்பட்டார். ஆற்றில் இறங்கிய அழகர் 5 நாட்கள் மதுரையில் தங்கி அருள்பாலித்தார். அழகருடன் 26 தற்காலிக உண்டியல்கள், 10 நிரந்தர உண்டியல்கள் வந்தன. இதில் பக்தர்கள் பணம், பொருட்கள் காணிக்கையாக செலுத்தினர். நேற்று கோயிலில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருப்பரங்குன்றம் நிர்வாக அதிகாரி செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டன. தற்காலிக உண்டியல்களில் 63,80,872 ரூபாயும், நிரந்தர உண்டியல்களில் 26,61,779 ரூபாயும், தங்கம் 85 கிராம், வெள்ளி 188 கிராம் வருவாயாக கிடைத்தன. தல்லாகுளம் பெருமாள் கோயில் உண்டியலில் 1,70,368 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.