பதிவு செய்த நாள்
20
மே
2017
05:05
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுக்கு பின் நந்தி சிலை அமைக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள பழமையான சந்திரசூடேஸ்வரர் கோவில் கோபுரம் முன், மிக உயரமான நந்தி சிலை இருந்தது. சிமெண்ட் மூலம் அமைக்கப்பட்டிருந்த இந்த நந்தி சிலை, 2001ல் கோவில் சீரமைப்பின் போது, பல்வேறு காரணங்களை கூறி, இடித்து அகற்றப்பட்டது. அதன் பின் கோவில் முன் நந்தி சிலை அமைக்கப்படவில்லை. இதனால் ஓசூர் பகுதியில் சரியாக மழை பெய்வதில்லை என்றும், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாகவும், பக்தர்கள் மத்தியில் பேசப்பட்டது. கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தி, நந்தி சிலையை மீண்டும் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணி துவங்கப்பட்டு, கோவில் கோபுரம் முன் நந்தி சிலையை அமைக்க பிரகாரமும், கோவிலுக்குள் உள்ள காசி விஸ்வநாதர் சிலையை அமைக்க, ஒரு கோவிலும் கட்டப்பட்டன. அத்துடன் கோவில் கோபுரம் எதிரே, காம்பவுண்ட் சுவரையொட்டி, காது சிதிலமடைந்ததால் பூஜை செய்யாமல் வைக்கப்பட்டிருந்த மரகத பச்சை கல்லால் செய்யப்பட்ட நந்தியை புரனமைப்பு செய்து, மீண்டும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி முடிந்து, காலை நந்தி சிலை துாக்கி வரப்பட்டு, அறநிலையத்துறை ஸ்தபதி முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில், புதிதாக கட்டப்பட்ட பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இதை பார்த்த பக்தர்கள், 16 ஆண்டுக்கு பின், மீண்டும் நந்தி சிலை அமைக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்ததுடன், அதன் முன் நின்ற, ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். வரும், 4ல் நடக்கும் கும்பாபிேஷகத்திற்கு முன்பாக, நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.